இலங்கையில் உள்ள சீன நாட்டினரை அந்நியப்படுத்த வேண்டாம் என்று இலங்கை அரசு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏறக்குறைய 10,000 சீன நாட்டினர் இலங்கையில் குடியுரிமை விசா பெற்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டு ஜெனரல் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர்களில் 4,251 பேர் தற்போது நாட்டில் வசித்து வருகின்றனர்.
சீன நாட்டினரை வேலைக்கு அமர்த்திய அனைத்து நிறுவனங்களின் நிர்வாகங்களிற்கும் கடந்த ஒரு மாதத்திற்குள் சீனாவிலிருந்து வந்த எந்தவொரு வெளிநாட்டினரையும் அவர்களின் குடியிருப்புகளுக்கும் பணியிடங்களுக்கும் செல்வதற்கு தடைவிதிக்கக்கோரி குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதர் செங் சூ யுவான், ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் தற்போது இலங்கையில் எஞ்சியிருக்கும் சீன பிரஜைகள் குறித்து பேசியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது, சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டு குழு பயணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது 150 சீன சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கையில் இருப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம்.
அவர்கள் அனைவரும் நல்ல சுகாதார நிலையில் உள்ளனர். இதைப் பற்றி எந்த அச்சமும் இருக்கக்கூடாது. ஆனால் மீண்டும் ஒரு முறை நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை எவ்வாறு ஈர்ப்பது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் புதிய சீன ஊழியர்களை அனுப்ப வேண்டாம் என்று சீன வர்த்தக அமைச்சு ஏற்கனவே அனைத்து நிறுவனங்களுக்கும் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு சீன நாட்டவர் ஒரு திட்டத்திற்காக ஒரு நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால், அவர்கள் 14 நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பணியாற்றும் சீன ஊழியர்கள் எவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது இலங்கையில் உள்ள சீன ஊழியர்கள் சீனப் புத்தாண்டுக்காக சீனா திரும்பவில்லை. அவர்கள் இலங்கையில்தான் இருக்கிறார்கள். புத்தாண்டுக்காக சீனாவுக்குச் சென்ற ஊழியர்கள் இன்னும் சீனாவில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் ஒரு நாட்டின் பிரச்சினை அல்ல, அது உலகளாவிய பிரச்சினை.
இந்த சூழ்நிலையில் இது தொடர்பிலான தக்க நடவடிக்கைகளை விரைவாக இலங்கையில் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
மேலும் பௌத்த பிக்குகள் சீனாவிற்காக பிரார்த்தனை செய்து கோயில்களில் விழிப்புடன் இருந்தபோது அவர் பலமாக உணர்ந்ததாகவும் சீனாவிற்கும் உலகின் மனிதநேயத்திற்கும் தங்கள் ஆதரவைக் காட்ட முஸ்லிம்களின் ஆதரவான செயற்பாட்டிற்காகவும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி,இலங்கை பொதுமக்கள் சீன நாட்டினரை அந்நியப்படுத்தாமல் தொடர்ந்து நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


















