தனிநபருக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கும் 18வது திருத்த யோசனையை கொண்டுவருவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை புதிய அரசாங்கத்திற்கு மக்கள் அளிக்கமாட்டார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்று வழங்கப்பட்டுள்ள சுதந்திரங்களை இழப்பதற்கு மக்கள் தயாராக இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திராணி பண்டார அநுராதபுரத்திலுள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம் விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.
இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் கொண்டுவர முயற்சி செய்யும் 19வது திருத்தத்தை இரத்து செய்வதற்கான யோசனைக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது கூறினார்.
19வது அரசியல் திருத்தத்தை கொண்டுவந்து இந்த நாட்டில் பாரிய மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தினோம். விசேடமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்செய்தோம், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவினோம்.
பொலிஸ் ஆணைக்குழு, நீதிச்சேவைகள் ஆணைக்குழு உள்ளிட்ட கட்டமைப்புக்கள் இன்று மிகவும் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றன. எந்தவொரு தலையீடுகளும் அவற்றின் மீது இல்லை.
மக்கள் இவற்றை நேர்த்தியானது என ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட இவற்றை மீண்டும் அவர்கள் இழப்பதற்கும் தயாரில்லை.
அவற்றை இல்லாமல் செய்யவே புதிய அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற முயற்சித்து வருகின்றது.
புதிய அரசாங்கத்தின் செயற்பாட்டினைப் பார்க்கும்போது அந்த அதிகாரத்தை மக்கள் மீள வழங்குவதற்கு தயங்குகின்றனர் என்பதை எம்மால் காணமுடிகிறது. ஆகவே அரசியலமைப்பு திருத்தத்தை செய்வதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்.
அன்று இருந்த 18வது திருத்தத்தைக் கொண்டுவந்து தனி அதிகாரத்தை மீண்டும் அமைத்து தனி நபர் ஒருவருக்கு எல்லையற்ற அதிகாரத்தை பாரப்படுத்தி தான்தோன்றித்தனமாக செயற்படவே முயற்சி எடுக்கப்படுகின்றது.
மீண்டுமொரு சந்தர்ப்பமாக நிறைவேற்று அதிகாரத்தை தனி ஒருவருக்கு வழங்க இடமளிக்கக்கூடாது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற கனவைக் கண்டுவருகின்ற புதிய அரசாங்கத்திற்கு அதனை யதார்த்தப்படுத்த இடமளிக்கக்கூடாது” என கூறியுள்ளார்.


















