சீனாவின் வுஹானில் இருந்து அழைத்துவரப்பட்ட முப்பத்து மூன்று இலங்கை மாணவர்கள் தொடர்ந்தும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது தியத்தலாவ இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட வுஹானிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மாணவர்கள் விமானத்தில் பறக்கும் போது வழக்கமாக விமானத்திற்குள் ஏற்படும் தடிமன் கூட அவர்களுக்கு ஏற்படவில்லை.
மாணவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூற எந்த ஆதாரமும் அறிகுறியும் அவர்களிடம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எப்போதும் நல்லுறவு உள்ளது. இதன் விளைவாகவே வுஹானில் இருந்து மாணவர்களை 4 வது நாடாக இலங்கை வெளியேற்றி இலங்கைக்கு அழைத்துவந்தனர்.
சீனாவால் இலங்கைக்கு காட்டப்படும் விசுவாசத்தை ஒருபோதும் களங்கப்படுத்தக்கூடாது, குறிப்பாக இந்த கடினமான நேரத்தில், அவர்களை குறைவாக மதிப்பிடக்கூடாது.
வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்போது, இலங்கை பொதுமக்கள் சீன நாட்டினரை அந்நியப்படுத்தாமல் தொடர்ந்து நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்று அமைச்சர் மேலும் கேட்டுக்கொண்டார்.


















