புலம்பெயர் தமிழர் அமைப்புக்களிடையே ஒற்றுமை என்ற விடயத்தில் சிலர் தங்களுடைய இருப்பினை தக்கவைப்பதற்காக, ஒற்றுமையினை நிராகரித்து வருவதாகவே கருத வேண்டியுள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன், டோர்ட்முன்ட் நகரில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது தமிழ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தமிழர் அமைப்புக்களிடையே ஒற்றுமை என்ற விடயத்தில் மக்களின் எதிர்பார்ப்பு என்பது புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. நாம் அதனை நிராகரிக்கவில்லை.
எல்லோருடனும் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். முனைகின்றோம். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் ஒற்றுமைக்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.
என்னைப் பொறுத்தவரை, அன்று பல இயக்கங்கள் காணப்பட்டிருந்தன. அப்போதும் இந்த ஒற்றுமை என்ற விடயம் பேசப்பட்டுத்தான் இருந்தது. ஆனால் ஒற்றுமை வரும் என்று காத்திருக்காமல், தெளிவானதொரு நிகழ்ச்சி நிரலுடன் தமது செயற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்தனர். மக்கள் அவர்கள் அங்கீகரித்து அவர்களின் பின்னால் நின்றனர்.
அந்த வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில், ஒற்றுமை வரும் வரை காத்திருக்காமல், எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையினை மையப்படுத்திய நீதிக்கான செயற்பாடாகட்டும், அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கமாகட்டும், விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கையாகட்டும் நாம் அனைத்து செயற்பாடுகளையும், அனைவரும் இணைந்ததாகவே முன்னெடுக்க விரும்புகின்றோம்.
இதன்அடிப்படையில், பல அமைப்புக்களுடன் பேசியிருந்தோம். சில விடயங்களில் ஒன்றாக செயற்பட்டிருந்தாலும் அது நீடிப்பதில்லை.
தமிழீழம் என்ற இலக்கிலோ, அதனை அடைவதற்கான வழியிலோ தெளிவான பார்வை அமைப்புகளிடத்தில் காணப்படும் நிலையில், இணைந்து கொள்வதில் எங்கே தடை இருக்கின்றது என்பதில்தான் கேள்வியாக இருக்கின்றது.
என்னைப் பொறுத்தவரை தங்களுடைய இருப்பினை தக்கவைப்பதற்காக, ஏதோவொரு காரணங்களை முன்வைத்து சிலர் ஒற்றுமையினை நிராகரித்து வருவதாகவே கருத வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


















