தீர்வு வழங்கப்பட வேண்டியது நாட்டில் அரசியல் கட்சிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அல்ல எனவும் நாடும், மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கே தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது சிலர் அரசியல் கட்சிகள் பற்றி பேசுகின்றனர். நாட்டின் பிரச்சினை அரசியல் கட்சிகள் அல்ல. நாடு மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.
கட்சிகளை கட்டிப்பிடித்துக்கொண்டு சண்டையிடுவது அல்ல செய்ய வேண்டிய வேலை. நாடு தற்போதுள்ள நிலைமையில் இருந்து எப்படி கட்டியெழுப்புவது? பொருளாதார நெருக்கடியுடன் எப்படி நாட்டை கட்டியெழுப்புவது? அந்த இடத்தை நோக்கியே நாங்கள் பயணிக்க வேண்டும்.
கடந்த ஒக்டோபர் மாதமே ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தது. இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


















