வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை
வெளிநாடுகளிலிருந்து வழங்கப்பட்ட உதவிகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள ஒருகொடவத்தையில் அமைந்துள்ள அனர்த்த நிவாரண சேவை களஞ்சிய வளாகத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான குழு உறுப்பினர்கள் இன்று (12) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளிலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஒருகொடவத்தையில் உள்ள அனர்த்த நிவாரண சேவை களஞ்சிய வளாகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக விநியோகிக்கும் பணிகள் இந்நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் நிவாரணப் பொருட்கள் நேற்றும் (11) நாட்டை வந்தடைந்திருந்தன.
‘திட்வா’ (Ditwa) புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்காக கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் சிலர் தமது சொந்த நிதியிலிருந்து 3.6 மில்லியன் ரூபா பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அதற்கான காசோலை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் அந்த அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.
அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்க பிரான்ஸ் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert) தெரிவித்தார்.
தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்தவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்காக பல துறைகளில் தமது ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் 13 மெட்ரிக் தொன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுதி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
3000 கொசுவலைகள், 2000 காற்று மெத்தைகள், 1000 படுக்கை விரிப்புகள் மற்றும் மேலும் 100 மெத்தைகள் அந்த நிவாரணத் தொகுதியில் அடங்கியிருந்தன.
இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்றும், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் குழுவொன்றும் நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக வருகை தந்திருந்தனர்.



















