தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கரை அடுத்திருக்கும் கொடைக்கல் பகுதியை சார்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). இவரது மனைவியின் பெயர் நிர்மலா (வயது 23). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகிறது.
இவர்கள் இருவருக்கும் சஞ்சனா என்ற 3 வயது குழந்தையும், ரித்திகா என்ற ஒரு வயது குழந்தையும் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் நர்சிங் பயின்று முடித்துள்ளதால், பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், நிர்மலா மற்றும் அவரது மாமனார் – மாமியார் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இதனால் கடும் மன வேதனையில் இருந்த நிர்மலா நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருமணம் முடிந்து நான்கு வருடங்களே ஆவதால் இராணிப்பேட்டை மாவட்ட உதவி ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இந்த இதுகுறித்த செய்தியை அறிந்த வெங்கடேசன் கொடைக்கல் கிராமத்திற்கு வந்து மனைவியின் உடலை பார்த்து கதறி அழுத நிலையில், மனைவி இல்லாது குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது குறித்த சோகத்திலும் இருந்துள்ளார்.
இதனையடுத்து மனைவி இறந்ததற்கு காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்கள் மற்றும் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று எண்ணி, நேற்று மாலை தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் இராணிப்பேட்டை அருகே இருக்கும் இரயில்வே தண்டவாளத்திற்கு வந்துள்ளார்.
மனவேதனையில் இருந்த அவர் தனது பெண் குழந்தையுடன் இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவத்தில் மூவரின் உடலும் இரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டு சிதறிக்கிடந்துள்ளது.
இதனை அடுத்து இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குடும்ப தகராறில் மனைவி இறந்த துக்கத்தில், கணவனும் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.