சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் பாடவேண்டும் என்பதற்கான நிலைப்பாடு என்ன என்று பிரதமரிடம் உதயராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் செய்துள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்குமான சந்திப்பு ஒன்று கடந்த 30ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உதய கம்பன் பில வலியுறுத்தி வருவதாகவும் இது தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அவ்வாறு எதுவும் கிடையாது தமிழில் தேசிய கீதம் இசைக்க எவ்வித தடையும் கிடையாது என தெரிவித்திருந்தார்.
எனினும், இதன்போது குறுக்கிட்ட கருனா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் தமிழில் இசைக்க வேண்டிய அவசியமில்லை ஒரு மொழியில் தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும், இந்தியாவில் கூட இந்த நிலைதான் உள்ளது என தெரிவுத்ததும் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் தமிழிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஒரு அணியினரும் சிங்களத்தில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என மற்றுமொரு அணியினரும் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து சென்றனர்.
எனினும் பிரதமர் அவர்கள் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.