கோதாபய ராஜபக்ச, சிங்கள பெளத்தர் அல்லாத இலங்கையரையும் அரவணைத்து பயணிப்பார் என்றால், அவருக்கு நாம் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குவோம்.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு,
இங்கே எதிரணி ஐதேகவில் இருப்போரும் கௌதம புத்தர்கள் அல்ல என்பது எனக்கு தெரியும். இதை எப்போதும் நான் பகிரங்கமாகவே சொல்லி வருகிறேன்.
ஆனால், “…இந்த கடும்போக்காளர், எதிர்காலத்தில் இந்நாட்டில் சட்டத்தின் ஆட்சியை கொண்டு வருவார்…” என்ற கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு எம்மால் கைதூக்க முடியாது.
அதுவரை எச்சரிக்கையாகவே இரு என்றும், அவரது ஆட்சியில் சிங்கள பெளத்தர் அல்லாத இலங்கையர்களை அச்சமூட்டும், “சம்பவங்கள்” நிகழும் போது வாயை மூடிக்கொண்டு இருக்காதே என்றும் எனது பட்டறிவு சொல்கிறது.
ஆகவேதான் நான் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் அவரை நோக்கி எமது நிலைப்பாடுகளை தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறேன்.
முதலில் கோதாபய நம்பிக்கையூட்டும் அறிகுறிகளையாவது காட்ட வேண்டும். நடவடிக்கைகள் பிறகு வரலாம்.
‘சிங்கள பெளத்தம் விரும்பாத எதையும் செய்ய தயார் இல்லை’ என்கிறார். இலங்கை நாட்டை கட்டி எழுப்ப நாம் முயலும் போது, சிங்கள பெளத்த நாட்டையே கட்டி எழுப்ப போவதாக தன் ஐம்புலன்களாலும் அறிவிக்கிறார்.
இந்த தமிழில் தேசிய கீதம் என்பது ஒருபுறம் சின்ன விஷயம். மறுபுறம் பெரிய விஷயம். அது இலங்கையின், “பன்மைத்துவ அடையாளத்தை” அறிவிப்பதால், அது பெரிய விஷயம்.
மந்த புத்தி விமல் வீரவன்ச போன்றோர் முன்வைக்கும் வாதங்களை நாம் எப்போதோ முறியடித்து களைத்து விட்டோம். ஆனால், கோதாவும், அவரது சகோதரர்களும், விமல் வீரவன்ச நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள்.
2016ம் வருடம் தமிழில் தேசிய கீதம், தேசிய சுதந்திர நிகழ்வில், (வீட்டில், காரியாலயத்தில், பாடசாலையில் அல்ல..) பாடும் நடவடிக்கையை எனது அமைச்சின் பிரதானத்துவத்துடன் அமைக்கபட்ட அமைச்சரவை உபகுழுவே செய்து முடித்தது.
தேசிய ஒருமைப்பாடு, மொழிகள் ஆகிய துறைசார் அமைச்சர் என்ற முறையில் எமது அரசுக்கு உள்ளேயே போராடிதான் இதை நாம் செய்தோம்.
“இப்போது வேண்டாம், கொஞ்சம் காலம் போகட்டும்” என்று என்னிடம் சொன்ன எமது அரசின் அமைச்சர்களும் உள்ளார்கள். ஆனால் துறைசார் அமைச்சர் என்ற முறையில் நான் தலைமை பங்கை உறுதியாக வகித்தேன்.
ஏனெனில், இலங்கை நாடு ஒரு பன்மொழி, பன்மத, பல்லின நாடு என்ற அடிப்படையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. இந்த அடிப்படையும் போனால், எல்லாம் போயே போய் விடும் என்பதை எனக்கு வரலாறு கற்றுக்கொடுத்து இருக்கிறது.
நான் ஜனாதிபதி கோதாவிடம், நீங்கள் “சிங்கப்பூர் சிற்பி
லீ-குவான்” போன்று மாறுங்கள் என்று சொல்கிறேன். நான் மதிக்கும் “லீ” அவர்களுக்கு மூன்று பக்கங்கள் இருந்தன.
லீ, மூன்று பக்க கடும்போக்காளர். 1)அரசியல் நன்னெறி, ஒழுக்கம் சார்பு கடும்போக்கு 2)ஊழல், வீண் விரயம் எதிர்ப்பு கடும்போக்கு. 3)ஒரு நாடு, பன்மொழி, பல்லினம், பன்மதம் சார்பான பன்மைத்துவ கடும்போக்கு.
இந்நாட்டில் இவரிடம் இந்த மூன்றாம் பக்கத்தை காணோம்.
இதை இப்படியே விட்டால், இன்னொரு இட்லரில்தான் முடியும். இட்லரும் இப்படிதான். தன்நாட்டில் ஆட்சியை பிடிக்க தன்னை “சோஷலிசவாதி” யாக காட்டிக்கொண்டே ஆட்சிக்கு வந்தார். பின் தன் ஆரிய இனவாதத்தை காட்டி தன் நாட்டையும், உலகையும் அழித்தார்.
இந்நாட்டில் இப்போது திடீரென “கோதா அலை” யினால் அள்ளுப்பட்டு போய் கொண்டிருக்கும் ஒருசில தமிழ், முஸ்லிம்கள் இதை கோதாவிடம், தங்கள் பங்குக்கு சொல்ல வேண்டும்.
கோதாவோ, எவரோ, இலங்கை அரசதிபர், பன்மைத்துவத்தை ஏற்று மாறும்வரை, நாம் ஜனநாயகரீதியாக எதிர்ப்போம்.!
கோதா, பன்மைத்துவ பக்கத்தையும் ஏற்றுக்கொண்டால், எம் தேவை முடியும். எம் பொதுவாழ்வு முடியும். சந்தோஷமாக நான் வீட்டுக்கு, தனிப்பட்ட வாழ்வுக்கு திரும்பி போய் விடுவேன்!” – என்றார்.