தமிழ் கட்சிகள் பிரிந்து வெளியேறிச் செல்கின்றமை எதிர்காலத்தில் தமிழர்களுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்குக் காரணமாக அமையும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
அத்துடன், இவ்வாறு வெளியேறிச் செல்கின்றமைக்கு அவர்களுக்கு இருந்த ஒரே ஒரு காரணம் தங்களுடைய இருப்பு சம்பந்தமாகவே அமைந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் பனை, தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவத்தார்.
அவர் கூறுகையில், “இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தந்தை செல்வநாயகத்தினால் இலங்கை பிரதமர்களிடம் தமிழ் மக்களின் சுயாட்சி உரிமை சம்பந்தமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஒப்பந்தங்கள் எழுதப்பட்டு அவை கிழித்து எறியப்பட்டன.
அதன் பிற்பாடு தந்தை செல்வநாயகம் அவர்கள் 1973ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தமிழீழக் கொள்கையை பிரகடனம் செய்தார். தமிழீழம் தான் தமிழர்களுக்கு ஒரே தீர்வாக அமையும் என்றும் பிரகடனம் செய்தார்.
அதனடிப்படையில் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் மூலம் தமிழர்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
அந்தப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மௌனித்ததன் பிற்பாடு தமிழர்களின் நிலமை, தமிழர்களின் தனித்துவம், தமிழர்களின் இன்றைய சூழ்நிலை கேள்விக் குறியாகியுள்ளது.
இந்நிலையில் இதற்கு முற்பாடு 2001ஆம் ஆண்டு தமிழர்களின் நலன்சார்ந்த முடிவை எடுப்பதற்கும், தமிழர்களின் அரசியல் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கும் தமிழ் தேசியக் கூட்மைப்பு உருவாக்கப்பட்டது.
உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இருந்தாலும் தற்போது கூட்டமைப்பில் இருந்து வெளியேறிச் சென்ற ஒரு சில கட்சிகள் தாங்கள் தனித்துவமாக தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்படும் பாதகத்திற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
குறிப்பாக வன்னி மாவட்டத்தில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் இருக்கின்றது. அதில் 2004ஆம் ஆண்டு 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களாக இருந்தார்கள். 2010ஆம் ஆண்டு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 2015ஆம் ஆண்டு நான் உட்பட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள்.
தமிழர்களுடைய தனித்துவத்தை தேசியக் கட்சிகள் உடைக்க நினைக்கின்ற இந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற ஒரு சில கட்சிகள் வன்னி மாவட்டத்தில் மக்களுடைய வாக்குகளைப் பிரிக்க நினைப்பது சிங்கள, முஸ்லிம் மக்களுடைய பிரதிநிதித்துவத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
எதிர்காலத்தில் தமிழர்களுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரையும் வெளியேற்றவில்லை. அவர்கள் தாங்களாகவே வெளியேறிச் சென்றனர்.
அவர்கள் வெளியேறிச் செல்கின்ற போது அவர்களுக்கு இருந்த ஒரேயொரு காரணம் தங்களுடைய இருப்பு சம்பந்தமாகவே அமைந்தது. நாடாளுமன்றத் தொகுதிக்கான ஆசனப் பங்கீடு தொடர்பான பிரச்சினை, தேசியப் பட்டியலில் தங்களுக்கான ஆசனம் வழங்கப்படவில்லை என்கின்ற கோரிக்கைகளுக்கு அமைவாகவே அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறிச் சென்றார்கள்.
அவர்கள் மக்கள் நலன் சார்ந்த முடிவை எடுப்பதற்காக வெளியேறிச் சென்றவர்கள் இல்லை. வெளியேறிச் சென்றவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியில் போகச் சொல்லவும் இல்லை. மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வர வேண்டாம் என்றும் சொல்லவும் இல்லை.
சேர்ந்து பயணிப்பதற்கு நாங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.