கூரை ஏறி கோழி பிடிக்காத தெரியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது போல் தான் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் கதை அமைந்துள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கத்தில் இருக்கும் பொழுது தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாவை வாங்கி கொடுப்பதற்கு முடியாமல் போன முதுகெழும்பற்ற இவர்கள் 1000 ரூபா பெற்றுக்கொடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரசை விமர்சிப்பதானது சாத்தான் வேதம் ஓதுவது போன்றே உள்ளது.
கடந்த காலத்தில் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், அது தரமாக இருக்கவில்லை. மேலும் பல வீட்டுதிட்டங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தன.
இதனையடுத்து ஆட்சி மாற்றத்தின் பின் பயனாளர்கள் எம்மிடம் இது தொடர்பில் முறையிட்டிருந்தனர்.
எனவே இனிவரும் காலங்களில் மோசடி இல்லாமல் தரமான, பல்வேறு வசதிகளுடன் கூடிய வீட்டுத்திட்டங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
அதுமட்டுமில்லாமல் கடந்த அரசாங்க காலத்தில் மலையகத்தில் கட்டப்பட்ட வீடுகள் மக்களுக்கு பாவனைக்கு ஏற்ற வகையில் இருக்கின்றதா என சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
அதேபோல் கண்டி மாவட்டத்தில் பெயர் சொல்லும் அளவிற்கு கூட அபிவிருத்திகள் இடம்பெறவில்லை. நாங்கள் கொண்டு வந்த வேலைத்திட்டங்களை வைத்துக் கொண்டு தாங்கள் செய்தது போல் பெயர் சூட்டிக் கொள்கின்றனர்.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அநியாயங்களை மூடி மறைப்பதற்கும், மக்களிடையே அனுதாப வாக்குகளை பெறுவதற்கும் தான் அன்று முதல் இன்று வரை இ.தொ.காவை விமர்சித்து வருகின்றனர்.
மக்களுக்கு பயன்பெறும் வகையில் வேலைத்திட்டங்களை செய்யாமல், ஹந்தானை தோட்டத்தில் 22 ஏக்கர் காணி அபகரித்து கொண்டது தான் இங்கு சிலரின் சாதனையாக இருக்கின்றது.
ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதாக இ.தொ.கா சொல்லியிருந்தது. அதனை இன்று பெற்றுக்கொடுத்து விட்டது. ஆனால் 50 ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள், முற்பணமாக 5000 ரூபாவை வாங்கி கொடுப்பதாக கூறியவர்கள் அதையும் வாங்கி கொடுக்க முடியவில்லை.
அப்படியானவர்கள் தங்களுடைய இயலாமையையும், கையாளாகாததனத்தையும் தான் எடுத்து காட்டுகின்றது.
கோமாளி தனமான அரசியலை கைவிட்டு விட்டு மக்களுக்கு சேவை செய்வது பற்றி சிந்தியுங்கள் என்றார்.