வன்னி மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினருக்குத் தனித்துப் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கி, கடந்த 20 வருடங்களாக வன்னியில் இல்லாதிருந்த நேரடி நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் தொகுதி அதிகார சபையினரும், கட்சியின் கிளைத் தலைவர்களும் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஐக்கிய தேசிய முன்னனியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,
கடந்த 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு ராசமனோகரி புலேந்திரன் வெற்றி பெற்றார்.
மேலும் இத்தேர்தலில் வவுனியா தொகுதியில் 5423 வாக்குகளும் மன்னார் தொகுதியில் 2507 வாக்குகளும், முல்லைத்தீவு தொகுதியில் 426 வாக்குகளும் என மொத்தமாக 8525 வாக்குகள் நமது கட்சிக்கு கிடைக்கப் பெற்றது.
இதன் மூலம் ராசமனோகரி புலேந்திரன் இத்தேர்தலில் வெற்றியடைந்து ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
பின்னர் அமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் கல்வி ராஜாங்க அமைச்சராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார்.
இத்தருணத்தில் அமைச்சராக பணிபுரிந்த திருமதி புலேந்திரன் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியைகட்டியெழுப்பியதுடன் இம் மாவட்டத்தின் அனைத்து இன மக்களுக்கும் சிறந்த சேவைகளையும் மேற்கொண்டார்.
மேலும் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாகவும் தெரிவாகினார்.
மேலும் கடந்த 1994ம் நடைபெற்ற மேற்படி பொதுத் தேர்தலின் போது வவுனியாவில் 4497 வாக்குகளும், மன்னாரில் 2437 வாக்குகளும் முல்லைத்தீவில் 799 வாக்குகளும் கிடைக்கப் பெற்றது.
இதன் அடிப்படையில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 7850 வாக்குகள் மொத்தமாக கிடைக்கப் பெற்றது.
அத்துடன் 2000 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பொழுதும் ஐக்கிய தேசிய கட்சி வன்னி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு சாந்தகுமார புஞ்சிஹேவ வெற்றியடைந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகினார்.
இத்தேர்தலில் வவுனியா தொகுதியில் 8335 வாக்குகளும் மன்னார் தொகுதியில் 1695 வாக்குகளும் முல்லைத்தீவு தொகுதியில் 182 வாக்குகளும் என மொத்தம் 11545 வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வன்னி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றது.
இதன் அடிப்படையில் வன்னி மாவட்டத்தில் 1989ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்று பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சி தனித்துப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியதை தங்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றோம்.
மேலும் இக்கால கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகள் வன்னியில் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டது.
கட்சியின் கிளைகள் பலம்பெற்று திறம்பட இயங்கி வந்தது. இதன் விளைவாக வன்னியில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எவ்வித இடையூறுமின்றி கிடைத்து வந்தது.
கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் வன்னி மாவட்டத்தில் முழுமையாக யுத்த சூழ்நிலைகள் நிலவிய சந்தர்ப்பத்திலும் கூட வன்னி மாவட்டத்தில் வதியும் மூவினத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் அபிமானிகளின் பேராதரவுடன் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக கிடைத்து வந்ததையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.
இந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கே உரிய நிலையான வாக்கு வங்கி தொடர்ந்தும் வன்னி மாவட்டத்தில் இருந்து வரும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஏனைய கட்சிகள் குறித்த வாக்குகளைக் தந்திரமாகப் பெற்றுக் தேர்தலில் இலகுவாக வெற்றியடைந்து தமது கட்சி சார்ந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்கின்றனர்.
பின்னர் இந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தினால் அவர்கள் தமது கட்சியை வலுப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை நலிவுறச் செய்ய மேற்கொண்ட மற்றும் மேற்கொண்டுவரும் வஞ்சகச் செயல்களைத் தங்களுக்கு இத்தால் சுட்டிகாட்டுகின்றோம்.
மேலும் வன்னி மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்குரிய நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவாகாத நிலையில் கட்சியின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கடும் விரக்தி நிலையை அடைந்துள்ளனர்.
வன்னியில் இந்த நிலை எதிர்வரும் பொதுத்தேர்தலில் மாற்றம் பெறல் வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அவர்கள் மாற்று நடவடிக்கைகளை எடுத்து பிற கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் அபாயம் உள்ளதையும் தங்களுக்குத் தெரிவிக்கின்றோம்.
எனவே நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வன்னியில் ஐக்கிய தேசிய கட்சியில் மாற்றுக்கட்சியினர் இனணந்து போட்டியிடுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.