2015 – 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சினால் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட குண்டுதுளைக்காத வாகனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பயன்படுத்துவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவாக தெரிவானார். இதனையடுத்து தேர்தலில்தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, குண்டுதுளைக்காத வாகனங்களை மெதமுலன வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனால் அப்போதைய அரச தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்காக வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்த காலப்பகுதியில் மஹிந்த கொண்டு சென்ற குண்டுதுளைக்காத வாகனங்களை, மைத்திரிக்கு வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பல முறை அறிவித்த போதும், யுத்தத்தை வென்ற தலைவர் என்ற ரீதியில் மஹிந்தவுக்கு உயிர் ஆபத்துக்கள் உள்ளதாக கூறி அந்த வாகனங்கள் மீள ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு புதிதாக குண்டு துளைக்காத வாகனங்கள் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய ஜனாதிபதியை பாதுகாக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சினால் இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் பாதுகாப்பு அமைச்சினால் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு குறித்த குண்டு துளைக்காத வாகனங்களே பயன்படுத்துவதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.