நான் தலையாட்டிப் பொம்மை கிடையாது. வலது கையால் அதிகாரங்களை வழங்கிவிட்டு இடது கையால் பறிக்கும் செயலையே ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலர் செய்து வருகின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலின்போதும் காலை வாரினார்கள். ஆனால், இம்முறை விழிப்பாகவே இருக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கடும் சினத்துடன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுமுன்தினம் சிறிகொத்தவில் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து சரத் பொன்சேகா, ரோஸி சேனாநாயக்க, அஜித் பி.பெரேரா, இம்தியாஸ் ஆகியோர் நீக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடைசியாக நடைபெற்ற கூட்டத்தில் சஜித் அணி பங்கேற்கவில்லை. பிரதிநிதி ஒருவரை மட்டுமே அனுப்பிவைத்தது.
எனினும், நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் சஜித் அணி பங்கேற்றிருந்தது. செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட நால்வரும் மீண்டும் செயற்குழுவுக்கு உள்வாங்கப்படுவார்கள் என எதிர்பார்க்கபட்டபோதும் அது நடைபெறவில்லை.
இதனால் சிறிகொத்தவுக்கு வருகை தந்திருந்த சரத் பொன்சேகா, அஜித் பி.பெரேரா ஆகியோர் ஏமாற்றத்துடனேயே திரும்பினர்.
மாலை 4.30 மணிக்கு ஆரம்பமான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் மாலை 6.30 வரை நடைபெற்றது இதில் புதிய அரசியல் கூட்டணியின் சின்னம் தொடர்பிலேயே விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலேயே கூட்டணி அமைய வேண்டும் எனவும், ‘யானை’ சின்னத்தின்கீழ் போட்டியிடுவதே சிறந்தது எனவும் ரணில் அணியினர் வாதிட்டதுடன், சஜித் அணியிலுள்ள உறுப்பினர்கள் சிலர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
அத்துடன், கூட்டணியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை ஏற்பதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டாலும் ஏனைய முக்கிய சில பதவிகள் தமது அணிக்கும் வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு சஜித் அணியினரும் தக்க பதிலடி கொடுத்தனர். ‘யானை’ மற்றும் ‘அன்னம்’ சின்னங்களை விட்டுவிட்டு புதிய சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே ஏற்புடைய செயற்பாடு எனவும் அவர்கள் தர்க்கங்களை முன்வைத்தனர்.
இதயம்’ சின்னமே பொருத்தமானதாக இருக்கும் என அவர்கள் குறிப்பிட்டதுடன் அதற்கு அங்கீகாரம் வழங்குமாறும் கோரினர். எனினும், ரணில் தரப்பினர் உடன்பட மறுத்தனர். வாக்குவாதமும் தொடர்ந்தது.
இதனால் கோபமடைந்த சஜித் பிரேமதாஸ, “கூட்டணியின் தலைமைப் பதவியை எனக்கு வழங்கிவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் தேர்தலை எதிர்கொள்க எனக் கூறுவது எந்த வகையில் நியாயம்? அதிகாரமற்ற அரசியல் பொம்மையாக இருக்கும் விளையாட்டில் ஈடுபட நான் தயாரில்லை” எனக் கூறிவிட்டு வெளிநடப்புச் செய்தார். சஜித்துக்குத் துணையாக மேலும் சிலர் வெளியேறினர்.
இதையடுத்து சின்னம் தொடர்பில் ஆராய்வதற்காக தமது தரப்பிலிருந்து நவீன் திஸாநாயக்க, லக்ஸ்மன் கிரியல்ல, ரவி கருணாநாயக்க ஆகிய மூவர் தலைமையில் ரணில் தரப்பினர் குழுவொன்றை அமைத்தனர்.
எனினும், திட்டமிட்ட அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் தரப்பினர் இழுத்தடிப்புச் செய்வதாகக் கருதும் சஜித் அணியினர் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் தற்போது திவிரம் காட்டி வருகின்றனர்.
இதன்ஓர் அங்கமாகவே தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றின் பெயரை மாற்றி, ‘இதயம்’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு சஜித் அணியினரால் வியூகம் வகுக்கப்பட்டு வருகின்றது.