கரைச்சி பிரதேச சபையினரால் பசுமை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் வடக்கு மாகாண சபையின் நிதி சுற்றறிகையின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொங்கு பாலம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையின் பிரதி ஒன்றை கோரி கிளிநொச்சி உள்ளுராட்சி திணைக்களத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக வழங்கப்பட்ட விசாரணை அறிக்கையின் மூலமே மேற்படி முறைகேடுகள் தெரியவந்துள்ளது.
கரைச்சி பிரதேச சபையால் பசுமை பூங்காவில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகதின் விசாரணை அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தொங்கு பாலத்தின் வேலைகள் நிறைவேற்றப்பட்டிருந்த போதும் 1989 ஆம் ஆண்டின் வர்த்தமானி அத்தியாயம் vii இன் 169-173 பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக செலவு மதிப்பீட்டுகள் எதுவும் மேற்கொள்ளப்படாது பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
எனவும் வட மாகாண சபையின் 2017 பெப்ரவரி 15 ஆம் திகதி NP/09/FRM/CIR2017 இலக்க மாகாண நிதி சுற்றுநிருபம் PF/06/2015(1) பிரதேச சபைகள் பிரிவு பெறுகைகள் குழுவின் கீழ் ஆக குறைந்தது மூன்று கூறுவிலை கோரல் பெறப்பட்டிருக்க வேண்டும் ஆனால் தொங்கு பாலம் விடயத்தில் அவை எதுவும் நடைபெறவில்லை.
மேலும் 2019 -12 -30 திகதி கடித்தின் இறைமகன் ஒட்டுத் தொழிற்சாலை 2019 நவம்பர் 16 ஆம் திகதியிலிருந்து 2019 டிசபம்ர் 30 வரை கரைச்சி பிரதேச சபையுடன் எவ்வித வேலை உடன்படிக்கையும் இன்றி 18 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதிக்கு சபையின் வேண்டுகோளுக்கு அமைய தன்னால் வேலைகள் செய்யப்பட்டதாக எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு 1985 ஏப்ரல் 15 ஆம் திகதிய வர்த்தமானி அமைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. திணைக்கள நடவடிக்கை அமைவாக மூலதன வேலை ஒன்றை மேற்கொள்ள வேண்டுமாயின் வருட பாதீட்டில் அது உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தொங்கு பாலம் உள்ளடக்கப்படவில்லை.