தமிழ் அரசியல் கட்சியினுடைய, கொள்கைகளை நாங்கள் முன்வைத்து, அவர்களுடைய கூடாரத்தை காலி செய்ய எத்தனிக்கின்றோம் என விசனமாக கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
கூடாரம் மிக விரைவில் காலியாகி விடும் என்பது எமக்கு நன்றாக தெரியும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
தமிழ் தேசிய கட்சி அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகள் தொடர்பில், தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக பரிணமித்துள்ளன.
வெளியில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் எந்த நேரத்திலும் இந்த கூட்டணிக்குள் வர முடியும். கூட்டணியின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
அந்த பின்னணியில், கூட்டணிக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
தமிழ் இனத்தைப் பொறுத்தமட்டில், அதனுடைய இன விடுதலைப் போராட்டம் உறுதியுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில் தான் இந்த கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியவர்கள் எமது மக்கள்.
எமது மக்கள் மத்தியில் இருக்க கூடிய அற்ப சொற்ப அரசியல் வேறுபாடுகளைக் கூட துடைத்தெறிந்து, ஒன்றுபட்ட மாபெரும் சக்தியாக, மக்கள் இயக்கமாக, அவர்களை ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடுத்தி, அவர்களின் இலட்சியத்தை நோக்கி, அவர்களை வீறுநடை போட வைத்து, ஈற்றிலே வெற்றி காண முடியுமென்று தான் இந்த கூட்டணி நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிலமையில், எமது கூட்டணிக்கு எதிராக கூறப்பட்டுள்ள ஒரு கருத்து, ஒரு தமிழ் அரசியல் கட்சியினுடைய, கொள்கைகளை நாங்கள் முன்வைத்து, அவர்களுடைய கூடாரத்தை காலி செய்ய எத்தனிக்கின்றோம் என விசனமாக கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
கூடாரம் மிக விரைவில் காலியாகி விடும் என்பது எமக்குத் தெரியும். நாற்காலிகளுக்காக தான் இந்த கூடாரம் என்றும் அந்த முன்னணியிடம் இருந்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
நாங்கள் நாற்காலிகளுக்கு என்றால், நீங்கள் முற்காலிகளுக்காகவா அரசியல் நடாத்துகின்றீர்கள் என எங்களாளும் கேட்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
எமது மக்கள் உரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும்.
தமிழினத்தின் தலைமையை தனது பரம்பரைச் சொத்து போன்று கருதிக் கொண்டுள்ள கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பை நாசமாக்கிய கட்சி, ஒற்றுமையின் பெயரால் கோசம் எழுப்புகின்றது என்றும் குற்றஞ்சாட்டினார்.