இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் செயற்படுகின்ற தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக வாரந்தோறும் ஒன்றுகூடி ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ச கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார்.
தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், விசேட பிரமுகர்களின் வருகையின்போது நினைவிற்காக கையெழுத்திடுகின்ற தலதா மாளிகையின் புத்தகத்திலும் கையெழுத்தை அவர் பதிவிட்டார்.
இந்த விஜயத்தின்போது போக்குவரத்து பிரதி அமைச்சரான திலும் அமுனுகமவும் கலந்துகொண்டிருந்தார்.
2019ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து தேசிய பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுவதில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டன.
குறிப்பாக முன் எச்சரிக்கை கிடைத்திருந்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான உத்தரவுகள் உரிய முறையில் வழங்கப்படாமை தொடர்பில் பல விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து வெளியிட்ட இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ச, ஒவ்வொரு வாரமும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் உரிய முறையில் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
நாங்கள் வாரந்தோறும் ஒன்றுகூடி நாட்டின் பாதுகாப்பு குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உலகில் செயற்பட்டு வருகின்ற தீவிரவாத அமைப்புக்கள் குறித்தும், ஏனைய அமைப்புக்கள் தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றோம்.
எமக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய எமது நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அனைத்து பொலிஸ் நிலையங்கள், முப்படையினர் தெளிவுபடுத்தப்பட்டு தயாரான முறையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.