இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா விதித்துள்ள பயண தடைக்கு இலங்கை கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.
இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளதுடன், இந்த தடை சுயாதீனமான ஆராயப்படாத தகவல்களை அடிப்படையாக கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தில் அவரது சிரேஸ்ட நிலையை கருத்தில் கொண்டே சவேந்திர சில்வா இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தில் உள்ளவர்களில் சிரேஸ்டநிலையில் உள்ளதாலேயே சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய ஜனாதிபதி இராணுவ பிரதானி பதவியை வழங்கினார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களிற்கு பின்னர் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளமை கரிசனை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய பதவிகளிற்கு நிரூபிக்கப்பட்ட அனுபவமுள்ள ஒருவரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நியமிப்பதை வெளிநாட்டு அரசாங்கமொன்று கேள்வி கேட்பது ஏமாற்றமளிக்கின்றது.
சவேந்திரசில்வா குறித்த தகவல்களின் நம்பகதன்மையை ஆராய்ந்து தனது முடிவை அமெரிக்கா மீள் பரிசீலனை செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.