இந்தியாவிடம் கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரியிருப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி தமது கடும் கண்டனத்தை மீண்டும் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சிக்கு வந்து தற்போது 86 நாட்களாகின்றன. இந்த நாட்களிற்குள் அவர்கள் எந்தவித பொருளாதார அபிவிருத்திகளையும் செய்யவில்லை.
அதனால்தான் இலங்கைக்குள்ளும், வெளிநாடுகளுக்கு சென்ற போதும் நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்து வருகின்றார். இவர்களுக்கு பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு முடியாதுள்ளது.
உதாரணங்கள் பலவற்றைக் கூறலாம். கடந்த அரசாங்கம் கடன்களை செலுத்த முடியாமற் போயுள்ளதாக எங்கேயும் சென்று கூறவில்லை. வட்டியை செலுத்தமுடியாதுள்ளது என்றும் கூறவில்லை.
பொருளாதார பக்கத்தில் கடந்த அரசாங்கம் சரியான நேரங்களில் கடன்களையும் வட்டிகளையும் செலுத்தி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியது. இப்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு சென்றிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் போல 14 பேரை அழைத்துக் கொண்டு சென்றார் என்றுதான் பேசப்பட்டது. இருப்பினும் 74 பேரை அழைத்துச் சென்றார் என்றுதான் பேசப்படுகின்றது.
இந்தியாவுக்கு சென்ற மஹிந்த ராஜபக்ச, நாடு தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளதால் கடன் செலுத்துவதற்காக கால அவகாசத்தை வழங்குமாறு கோரியிருந்தார். இது பகிரங்கமாக கோரியிருந்தார்.
அரச தலைவர் ஒருவர் தனது நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் கடனை திருப்பிச்செலுத்த கால அவகாசம் கோருவது மிகவும் துரதிஸ்டமான சம்பவமாகும். உலக நாடுகளுக்கு முன்பாக வெட்கமடையும் சந்தர்ப்பமாகும்.
சுனாமி ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும் கடன் செலுத்தும் கால அவகாசத்தை தள்ளிப்போடுமாறு கோரவில்லை.
நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்பதே பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இந்தப் பேச்சிலிருந்து அம்பலமாகியுள்ளது.
வங்குரோத்து நிலை நாட்டில் எவரும் முதலீடுகளை செய்யவும் முதலீட்டாளர்கள் முன்வரமாட்டார்கள். 400 பில்லியன் ரூபா கடனுக்காக மஹிந்த இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
நாட்டின் மொத்த தேசிய கடனைப் பார்க்கும்போது இந்த தொகையானது மிகவும் சிறியதாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.