இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, சர்வதேச நாடுகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய அரசு தமிழர் பிரச்சினை தொடர்பாக வெளியிடும் கருத்துக்கள் தொடர்பாக கருத்து கூறும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயங்களை மேற்கொண்டு திரும்பியுள்ளனர். இவர்கள் இந்தியாவுடன் பேசிய விடயங்களை வெளியில் வந்து பேசவில்லை.
குறிப்பாக இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்ற விதத்திலேயேஇவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இராஜதந்திரிகள் ரீதியிலான சந்திப்புக்கள் நடைபெற்றாலும் அல்லது ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வுகள் நடைபெற்றாலும் அவர்கள் பல கருத்துக்களைக் கூறுவார்கள்.
ஆனால் அதுவல்ல முக்கிய விடயம். சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் என்ன கதைத்துள்ளார்கள் என்பது தான் நாம் அறியவேண்டிய விடயமாகும்.
அதாவது இலங்கை,இந்திய ஒப்பந்தத்தில் ஏற்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அது கொண்டுவரப்பட்ட நாளில் இருந்து இன்று வரை கூட அதனை இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த ஆட்சிக் காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்மொழியப்பட்ட அரசமைப்பில் கூட 13ஆவது திருத்தச் சட்டம் பற்றிய கதை எதுவுமே இல்லை.
இந்த நிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்றே தீர்வுகாண முயற்சிகள் இடம்பெற்றன.
இலங்கை,இந்தியாவுக்கு இடையிலான கலந்துரையாடலும் அவ்வாறே அமைந்துள்ளது.
அந்தவகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
எனவே, தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் சர்வதேச நாடுகள் தான் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.