இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கான அமெரிக்காவின் பயணத் தடை தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினஷே் குணவர்தனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் பயணத்தடை அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முறையை அநாவசியமாகச் சிக்கலுக்கு உள்ளாக்கும் என்று அலெய்னாவிடம் சுட்டிக்காட்டிய தினேஷ், வொஷிங்டன் அதன் தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அத்துடன், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்களில் முக்கிய பதவிகளுக்கு நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளை நியமிப்பதற்கு ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவருக்கு இருக்கும் தற்துணிவு அதிகாரத்தை வெளிநாட்டு அரசு ஒன்று கேள்விக்குள்ளாக்குவது ஏமாற்றத்தைத் தருகின்றது எனவும் அவர் விசனம் தெரிவித்தார்.
இராணுவத் தளபதியும் பதில் முப்படைகளின் தலைமைத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அமெரிக்காவால் விதிக்கப்பட்டிருக்கும் பயணத்தடை தொடர்பான இலங்கையின் உறுதியான ஆட்சேபனைகளை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று அலெய்னா ரெப்லிட்ஸிடம் உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்தினார்.
இதன்போது இலங்கையின் அக்கறைகளை வொஷிங்டனுக்குத் தெரியப்படுத்துவதாக அமெரிக்க தூதுவர் கூறியதுடன் தற்போது தொடரும் இலங்கையுடனான ஒத்துழைப்பின் சகல அம்சங்கள் தொடர்பான அமெரிக்க அரசின் தொடர்ச்சியான பற்றுறுதியை அவர் மீளவும் வலியுறுத்தினார்.
பாதுகாப்புத் துறை உட்பட அந்த அம்சங்களின் விரிவாக்கத்தை உறுதிப்படுத்துவதிலும் அமெரிக்கா அக்கறை கொண்டிருக்கின்றது எனவும் தூதுவர் குறிப்பிட்டார்.
வட அமெரிக்க விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம்.பெரேரா, அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைவர் மாட்டின் ஹெலி, வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, சவேந்திர சில்வாவுக்கான பயணத் தடை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட உத்தியாகபூர்வமாக அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை அரசின் உடனடிப் பிரதிபலிப்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை முன்னதாக வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.