இலங்கை மற்றும் துபாயில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்த போது அவர்களிடமிருந்து 1.24 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்ககட்டிகளை பறிமுதல் செய்த பொலிசார், அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்த பயணிகள் விமானம் நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியது.
அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த பாத்திமா (48), பரீனாவிஸ்வி (43) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் ஹமீது (34), ரசீத்அலி (31) ஆகிய 4 பேரும் சுற்றுலா பயணியாக ஒரே குழுவாக இலங்கை சென்றுவிட்டு வந்திருந்தது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து ஆடைகளை கலைந்து சோதனை செய்த போது, அவர்கள் 4 பேரும் உள்ளாடையில் 11 பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிலிருந்து 1.284 கிலோ தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகளை பறிமுதல் செய்தனர்.
அதன் பின் காலை 8.30 மணிக்கு இலங்கையில் இருந்து மற்றொரு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இலங்கையை சேர்ந்த யாசீர் (49), ராமநாதபுரத்தை சேர்ந்த பைசல் ரஹ்மான் (23), சென்னையை சேர்ந்த நசீர் அகமது (28) ஆகிய மூன்று பேரும் சுற்றுலா பயணிகள் விசாவில் சென்றுவிட்டு வந்திருந்தனர்.
இவர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டதால் சோதனை செய்தனர். அப்போது அவர்களது உள் ஆடையில் மறைத்து வைத்திருந்த 1.324 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு துபாயில் இருந்து எமிரேட் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையிரங்கியது.
அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த நூர்ஹக் (39) என்பவர் வந்திருந்தார். அவரிடம் நடத்திய சோதனையில் ஜீன்ஸ் பேண்ட்டில் பெல்ட் அணியும் பகுதியில் 3 அழகு சாதன பேஸ்ட்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது 3 பேஸ்ட்டில் 303 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த அதிரடி சோதனையில் இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.24 கோடி மதிப்பில் 2.91 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 இலங்கை பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,