கடந்த அரசாங்கம் அரச அதிகாரிகளை ஓரங்கட்டியதுடன், சுற்றுச் சூழலைப் பொருட்படுத்தாமல் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப செயற்பட்டது.
அரச அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு மக்களையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று வீடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த ஹேரத் கூறினார்.
ஒரு கட்சிக்கு நல்ல முதுகெலும்பு இருக்க வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நல்ல முதுகெலும்பைக் கொண்டுள்ளது.
அதுபோன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் நல்ல முதுகெலும்பைக் கொண்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர், இந்த இரு கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பெரிய சக்தியை உருவாக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னாள் வீடமைப்பு அமைச்சர் கடந்த காலத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். தனது ஜனாதிபதிக் கனவைக் காணபிப்பதற்காக பிள்ளைகளுக்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் அமைசச்ர் மேலும் கூறினார்.
கூட்டாதன முகாமைத்துவ அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சரண கருணாரத்தின தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் உத்தியோகபூர்வ வைபவத்தின் (13) போது அமைச்சர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். இந்த நிகழ்வு கொழும்பு, கூட்டாதன முகாமைத்துவ அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
புதிய தலைவர் மகா சங்கத்தின் ஆசீர்வாதத்துடன் மத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் கூட்டாதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்தின தேரர் ஒரு சுருக்கமான சொற்பொழிவை நிகழ்த்தினார்.
இந் நிகழ்வில் கூட்டாதன முகாமைத்துவ அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர்.கே. ஜயவீர உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.