வவுனியா – புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் தேர்ச்சி கூடம் கடற்றொழில் மற்றும் நீரியில் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியினை அமைச்சரினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கான பதக்கங்களையும் , சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் தேசிய பாடசாலையை ஊக்குவிக்கும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை. மாகாண சபைக்கு கீழாகவே பாடசாலைகளை முன்னேற்றப்பட வேண்டும்.
வளர்த்தெடுக்க வேண்டும், தேசிய தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற கொள்கையோடு செயற்பட்டு வந்தேன். ஆனால் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியதாக சொல்லப்படும் கட்சிகள் அல்லது தலைவர்கள் அந்த கொள்கைகளை சரியாக முன்னெடுக்கவில்லை.
அந்த வகையில் பல இடங்களிற்கு சென்ற போது தங்களுடைய பாடசாலைகளை தரம் உயர்த்தி தேசிய பாடசாலைகளாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
விரும்பியோ, விரும்பாமலோ அவர்களுடைய தேவைகளையும் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து அமைச்சரவையில் சிபாரிசு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் பின்னர் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது ஏனைய கட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் உருவாகுவதற்கோ அச்சுறுத்தலாக அமையுமா என கேள்வி எழுப்பபட்டுள்ளது.
ஜனநாயகத்தில் ஆயிரம் மலர்கள் மலரலாம் என்பது தான் எங்களுடைய கொள்கை. கடந்த காலத்திலே பேச்சு சுதந்திரம் மற்றும் மாற்றுக்கருத்துக்கு இடமளிக்காத நிலைமையினால் எமது தமிழ் சமூகம் அழிய வேண்டிய, சீரழிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
மாற்றான் வீட்டுத்தோட்டத்தில் மல்லிகையும் மணக்கும் என்பது தான் எனது கருத்து என்றும் பதிலளித்துள்ளார்.