உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ச அணியில் அமைக்கப்படும் புதிய பொதுக் கூட்டணியில் உயர்ந்த பதவியை வகிக்கவுள்ள நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இனியும் நடத்தப்படாது என்ற நிலைமை உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலும் இன்று தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏப்ரல் தாக்குதலினால் கிறிஸ்தவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்ட போது மஹிந்த ராஜபக்ச அணி நன்றாக அதனைப் பாவித்து குளிர்காய்ந்தது.
சஹ்ரானின் குண்டுத் தாக்குதலையே ஜனாதிபதி தேர்தலில் விற்பனை செய்து ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம், மீண்டும் பொதுத் தேர்தலில் சஹ்ரானின் குண்டுகளையே பயன்படுத்தவுள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, இந்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மீதான விசாரணைகளில் திருப்திகாண முடியாது என்று தெரிவித்திருக்கின்றார். இது உண்மைதான்.
தாம் ஆட்சிக்குவந்து இரண்டே வாரங்களில் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உள்ளே தள்ளுவதாக கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கர்தினாலை சந்தித்து உறுதிகூறியிருந்தார்.
அதற்காகவே பலரும் கோட்டாபயவுக்கு வாக்குகளை அளித்தார்கள். இன்று 04 மாதங்களாகின்ற போதிலும் எவரும் கைது செய்யப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான பிரதான பொறுப்பாளி இன்று ராஜபக்சவின் பொதுக் கூட்டணியில் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் நிகழும்போது பாதுகாப்பு படை பிரதானியாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நாட்டின் தேசிய பாதுகாப்பை உதாசீனமாக கருதியவர் அந்த காலத்தில் அனைத்து விசாரணைகளிலும் தப்பிச் சென்றார்.
இப்போது இந்த தாக்குதல் குறித்து மேலதிக தகவல்களை தேடிச்செல்லும்போது கோட்டா-மஹிந்த கூட்டணியில் மிகப்பெரிய பொறுப்புக்கு மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படுகின்றார்.
ஆகவே இந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து எந்தவொரு நபரும் இனிமேல் கைது செய்யப்பட மாட்டார்கள் என்பதோடு மாறாக ஐக்கிய தேசியக் கட்சி பக்கமாக குறைகூற ஆரம்பிப்பார்கள்.
உண்மையான கொலையாளிகள் ராஜபக்சவின் மடியில் மறைந்துவிடுவார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.