மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 170 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.
அவரது குறித்த தகவலை மேற்கோள்காட்டி நேற்று மாவட்டசெயலக தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த பெப்ரவரி 07ஆம் திகதி தொடக்கம்;14 பெப்ரவரி வரையும் 170 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.
அதன்படி மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை 25 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், குறிப்பிடப்படும் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளான ஆரையம்பதி 23, களுவாஞ்சிகுடி 14 வாழைச்சேனை 25 செங்கலடி 08 காத்தான்குடி 15, ஏறாவூர் 08, வெல்லாவெளி 03, வவுணதீவு 07, பட்டிப்பளை 04, ஓட்டமாவடி 18, கோறளைப்பற்று மத்தி 10, கிரான் 06, வாகரை 04, பேர் என டெங்குநோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.