யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள கொங்கிரீட் பொருத்து வீடுகளுக்கான, கொங்கிரீட்கள் சீனாவிலிருந்து கொண்டு வரப்படவுள்ளன. அவற்றை பொருத்தும் பணியில் இந்தியப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சால் கொங்கிரீட் பொருத்து வீடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் கொங்கிரீட் வீடுகளே அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிதி ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில், கொங்கிரீட் பொருத்து வீடுகள் அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.
கொங்கிரீட் பொருத்து வீடுகளுக்கான கொங்கிரீட் சுவர்கள் சீனாவிலிருந்து கொள்கலனில் கொண்டுவரப்படவுள்ளது. இப்போது இவை ஏற்றப்பட்டு வருவதாகவும் விரைவில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சீனப் பணியாளர்களைப் பயன்படுத்தியே கட்டுமானத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அதனை விரும்பியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனப் பணியாளர்கள் பணியாற்றுவதை இந்திய அரசு விரும்பவில்லை.
இதனையடுத்து, இந்தியப் பணியாளர்களைப் பயன்படுத்தியே கொங்கிரீட் பொருத்து வீடுகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.