யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் எடுத்த வித்தியாசமான முயற்சி பலருடைய பார்வையையும் அந்த இளைஞன் மீது திரும்ப வைத்துள்ளது.
ஒரே சமயத்தில் தமிழ் மொழியை வளர்த்தும்,தமிழர்களின் வரலாற்று பெருமைகளை வெளிப்படுத்தியும் அதன் ஊடாக தனக்கேற்ற வருமானத்தை அந்த இளைஞர் ஈட்டி வருவதனாலேயே பலருடைய பார்வை அந்த இளைஞர் மீது திரும்பியுள்ளது
இலங்கை யாழ்ப்பணம் நல்லூரை வசிப்பிடமாக கொண்டவர் பாலச்சந்திரன் கீர்த்தனன் என்ற இளைஞர்.தமிழ் மொழியினை பொறித்த ஆடைகளையும் பொருட்களை மாத்திரம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையில் நடாத்தி வருகின்றார்.
இது குறித்து அந்த இளைஞர் தெரிவிக்கையில்,
தமிழ் மொழி மீது இருந்த விரும்பத்தால் எனக்குள் தேடல் அதிகமாக இருந்தது. புத்தககங்கள், சஞ்சிகளை தாண்டி நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் ஊடாக தமிழ் மொழியை கொண்டுவர வேண்டும் என்று எண்ணினேன்.அதனால் டீ ஷர்ட் ஊடாக தமிழ் மொழியை கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இதை நான் முழுமையாக வியாபாராமாக செய்யவில்லை. தமிழிற்கு பணியாற்ற வேண்டும் என்ற கடமையினாலேயே இதை திருப்தியாக செய்கிறேன்.
தமிழை வளர்க்க வேண்டும், எனது தமிழ் மொழியின் பெருமைகளை அனைவரும் அறிய வேண்டும் என்ற எனது முயற்சிக்கு எனது குடும்பத்தினரும், நண்பர்களும் பெரும் ஒத்துழைப்பு தருகிறார்கள். குறிப்பாக யாழ்ப்பாணத்தினை பொறுத்தவரையில் அரசாங்க உத்தியோகம் செய்யாமல் வேறு வேலைகளை தேடுவதற்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். இந்த வகையில் எனதுகுடும்பத்தினர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை தருகிறார்கள்.
இவ்வாறு தமிழ் மீது அவர் கொண்டபற்றை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது