மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய நீர்நிலைப் பகுதிகளில் சட்டவிரோதமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட பெருமளவிலான மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மூன்று களஞ்சிய சாலைகள் வவுணதீவு விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளன.
இந்த முற்றுகையின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பதுளை வீதிப் பிரதேசத்திலுள்ள கொடுவாமடு கித்துள் ஆகிய இடங்களில் இந்த மணல் களஞ்சிய சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இங்கு 159 கியூப் மணல் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
தொல்பொருள் ஆய்வு நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுணதீவு விசேட அதிரடிப்படையினர் இந்த பாரிய முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கைப்பற்றப்பட்ட மணல் கரடியனாறு பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதோடு சந்தேக நபரும் கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் தொடர்ந்தும் கண்காணிப்பு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.