கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கரையோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகவலை கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை, பேருவளை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து நான்கு மீன்பிடிப் படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்றுமுன்தினம் பங்களாதேஷின் சிட்டகொங் மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மித்த வங்காள விரிகுடா பகுதியில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதானவர்கள் அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாக அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் குறித்த மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.