வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தேசிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு பிரஜைகள் குழுவை அண்மையில் மட்டக்களப்பு, மாமாங்கம் பிரதேசத்தில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.
சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆணந்தன் உட்பட பலர் கலந்துகொண்ட அந்தச் சந்திப்பில், பிள்ளையானுடன் இணைந்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க தமக்கு உதவுமாறு தமிழ் தேசிய மக்கள் கூட்டணியினர் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
சிறைக்குச் சென்று பிள்ளையானை சந்திக்க தாம் தயார் என்றும் அவர்கள் அங்கு உறுதியளித்துள்ளார்கள்.
வடக்கும், கிழக்கும் இணைந்த ஆட்சி, ‘தமிழ் தேசியம்’ எனக் கூறி வரும் விக்னேஸ்வரன் தலைமையிலான அணி, வடக்கு கிழக்கு பிரிவுற்று, வெறுமனே தனிக் கிழக்கு மாகாணம் என்ற கொள்ளையில் அரசியல் செய்துவரும் பிள்ளையானுடன் எப்படி சேரமுடியும் என்று கேள்வி எழுப்புகின்றார்கள் தமிழ் தேசியவாதிகள்.
தேர்தல் வெற்றி, ஆசணம் என்று வருகின்றபோது கொள்கைகளைக் காற்றில் பறக்கவிடும் போக்கை, விக்னேஸ்வரன் தலைமையிலான த.தே.ம.கூட்டணியும் கடைப்பிடிப்பது கவலையளிப்பதாக கூறுகின்றார்கள் கிழக்கில் உள்ள பிரஜைகள் குழு பிரதிநிதிகள்.