“இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களிலிருந்து வெளியேறுவது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு எடுத்துள்ள முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் அடிபணிந்து போவதற்கு கோட்டாபய அரசு கோமாளியல்ல.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மூத்த ஆலோசகரும் தவிசாளருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து அரசு விலகும் முடிவையடுத்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர் அமைப்புக்களும் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன என்று வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தலாம் என்று எவரும் கனவு காணக்கூடாது. அந்தக் கனவு ஒருபோதும் நனவாகாது. அந்த நிலைமை வருவதற்கு நாமும் எமது நட்பு நாடுகளும் ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம்.
இந்த நாட்டின் உள்விவகார விடயங்களை சர்வதேச அமைப்புகளிடம் பொறுப்பளிக்கக் கோட்டாபய அரசு தயாராக இல்லை. அவர்களின் மேற்பார்வையில் இந்த நாட்டை அடிபணிய வைக்கவும் நாம் தயாராக இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர் அமைப்புக்களும் இந்த நாட்டுக்கு மாபெரும் துரோகங்களை இழைத்து வருகின்றன. இந்தத் துரோகிகளுக்கே வரலாறே பாடம் புகட்டும்” – என்றார்.