“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சிறந்த நிர்வாகத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்சவே சீர்குலைக்கின்றார் என்று மக்கள் கருதுவது முற்றிலும் தவறானதாகும்.
நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அரச உயர் பதவிகளை வழங்கியுள்ளார்.”
இவ்வாறு குற்றம்சாட்டினார் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது.
தேர்தல் காலத்தில் தேசத் துரோக ஒப்பந்தமாக விமர்சிக்கப்பட்ட எம்.சி.சி. ஒப்பந்தத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இரகசியமான முறையில் கைச்சாத்திடும் முயற்சியை அரசு முன்னெடுக்கின்றது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் அரசு தரமான நடவடிக்கைகளை இதுவரையில் முன்னெடுக்கவில்லை.
ஆனால், தமக்குத் தேவையானவர்களை நாட்டுக்குக் கொண்டு வந்து அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிக்கும் நடடிக்கைகளை இந்த அரசு முன்னெடுத்துள்ளது.
ஜெனிவா விவகாரத்தில் அரசு தற்போது முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் ஒன்றும் புதிதான விடயமல்ல.
சர்வதேசத்தின் மத்தியில் நாடு பல நெருக்கடியை எதிர்கொள்ள 2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய பொதுச்செயலாளர் நாயகத்துடன் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தமே பிரதான காரணமாகும்” – என்றார்.