மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 ஆயிரம் வீடுகளின் தேவையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு,வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடியில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பத்திற்கான வீட்டிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத ஒரு சமூகமாக தமிழ் சமூகம் இன்று உள்ளது.இலங்கையில் உள்ள சமூகங்களில் அதிகளவு அடிப்படை தேவைகளையுடைய சமூகமாக தமிழ் சமூகம் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 40ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு வீடுகள் இல்லை.அதே எண்ணிக்கையானோருக்கு மலசலகூடமில்லை.பலருக்கு இருப்பதற்கான காணியில்லை.
30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கின்றன,எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.பல்வேறு தேவைகளை சுமந்து நிற்கும் சமூகமாக எமது சமூகம் உள்ளது.
இனிவரும் காலத்தில் எமது சமூகத்தின் நிலைமை தற்போதுள்ள நிலைமையினை விட மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25000 பேர் மத்திய கிழக்கு நாடுகளை நம்பி வாழும் நிலையில் உள்ளனர். அதில் 8000 பணிப்பெண்கள் உள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளும் இல்லையென்றால் அவர்களின் நிலைமையென்ன? இந்த நிலைமையில் எமது ஒரு பகுதியினர் மக்களுக்கான தீர்வு,உரிமை என பயணிக்கும் போது அதற்கு இணைவாக இன்னுமொறு பிரிவு அபிவிருத்தியென்ற விடயத்தில் நிச்சயமாக பயணித்தாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


















