இலங்கையிலே இடம்பெற்ற நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள், போர்க்குற்றங்கள், இன அழிப்புக்கள் போன்ற விடயங்களுக்கு எதிராக இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த அமெரிக்கா உரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென அமெரிக்க தூதரக அரசியல் பிரிவு அதிகாரியான அன்ரனியிடம் தமிழர் மரபுரிமைப் பேரவை எடுத்துரைத்துள்ளதாக, தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான விஜயகுமார் நவநீதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற தமிழர் மரபுரிமைப் பேரவை அமைப்பினர் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்கலந்துரையாடல் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ,
அமெரிக்கத் தூதரகத்தினுடைய அரசியல் பிரிவுப் பொறுப்பதிகாரி அன்ரனியோடு முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டோம்.
அந்த கலந்துரையாடலில், மிகக்குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் ஐ.நா மனித உரிமைப் பேரவையிலே இலங்கை கலந்து கொண்டுள்ள சூழ்நிலையிலே, தமிழ் மக்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பிலும் அவருடன் பேசியிருக்கின்றோம்.
அத்துடன் இலங்கையிலே இடம்பெற்ற நீதிக்குப் புறம்பான செயற்பாடுககள், போர்க்குற்றங்கள், இன அழிப்புக்கள் போன்ற விடயங்களுக்கு எதிராக அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கின்ற வகையிலே ஒரு சர்வதேச விசாரணையினையை மேற்கொள்வதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்ற செய்தியினை மிகவும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கின்றோம்.
ஒரு பாதிக்கப்பட்ட இனமாக இருக்கின்ற தமிழர்கள், அமெரிக்கா போன்ற சர்வதேச வல்லரசுகளினுடைய அனுசரணையுடன் தான் எங்களுடைய உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அந்த அடிப்படையிலே இலங்கை தொடர்ந்தும் நீதி மீறல்களை அல்லது நடந்து முடிந்த தவறுகளுக்கு வருத்தம் கூடத் தெரிவிக்காத ஒரு சூழ்நிலையிலே, எந்தத் தவறுகளும் தங்களுடைய அரசாட்சிக் காலத்திலோ அல்லது போர் இடம்பெற்ற காலத்திலோ இடம்பெறவில்லை என மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்ற சூழ்நிலையிலே அமெரிக்கா போன்ற அரசுகள் இலங்கை அரசின் மீது மிகக் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.