தான் பணிபுரிந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே தனக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
46 வயதுடைய இலங்கை பெண் ஒருவருக்கே கொரோனா தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கு உள்ளான குறித்த இலங்கை பெண் Brascia வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கை அதிகாரி ஒருவருடன் அவர் நேற்று காணொளி ஊடாக உரையாடியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“எனக்கு தலைவலியும் காய்ச்சலும் காணப்பட்டது. சாதாரண தலைவலி காய்ச்சல் என நினைத்துக்கொண்டிருந்தேன். வேதனை அதிகரித்த பட்சத்திலே நான் வைத்தியசாலை சென்று சிகிச்சைப் பெற முயற்சித்தேன்.
அந்த சந்தர்ப்பத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதை வைத்தியர்கள் அறிவித்தனர்.
நான் பணிபுரியும் வீட்டில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அறிவித்தார்கள். அவர்களிடமிருந்து எனக்கும் தொற்றியதாக அறியக் கிடைத்தது.
என்னை பார்வையிடுவதற்கு எவரையும் வைத்தியசாலை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. எனது கணவரை கூட பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்றார்.