மட்டக்களப்பு- ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் உள்ள நெடியமடு எனும் கிராமத்தில் தூக்கத்திலிருந்த பெண் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் குறித்த பெண்படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் நெடியமடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவரே பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் நிமித்தம் வேலை வாய்ப்புப்பெற்றுச் சென்றுள்ளார்.
இதனால் தனது மூன்று பிள்ளைகளுடன் உறவினர்களின் பாதுகாப்பில் குறித்த பெண் வசித்து வந்துள்ளதாக ஆரம்பக் கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தாயும் பிள்ளைகளும் தூக்கத்தில் இருந்தவேளையில் வீட்டின் கூரைவழியாக வீட்டினுள் இறங்கிய மர்ம நபர், உறக்கத்திலிருந்த பெண்ணை கூரிய கத்தியினால் தலையிலும் கையிலும் வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இச்சம்பவம்தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸாரும், மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.