மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் 12 சந்தேகநபர்களையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இது தேர்தலை மையமாகக் கொண்டு தன் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கலாகும்.
நான் நிதி அமைச்சராக கடமையாற்றிய காலத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் எனக்குக் கீழ் ஒரு வங்கியும் இருக்கவில்லை. மத்திய வங்கியும் இருக்கவில்லை. இந்நிலையில் எவ்வாறு இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இது தேர்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினையாகும். இது எமது கட்சிக்கும் எனக்கும் எதிராகச் செய்யும் அரசியல் சதியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.