கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மாவட்ட கிளை இன்று மீண்டும் கூடி ஆராய்ந்தது.
கிளை தலைவர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் நறைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்தில், கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.
கொழும்பில் வசிக்கும் அனைத்து தமிழர்களின் சார்பிலும், அவர்களின் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழரசு கட்சிக்கு உண்டு என்பது கூட்டத்தில் கலந்துகொண்ட பலராலும் வலிறுத்தப்பட்டது.
எதிர்வரும் 6ம் திகதி கொழும்பில் கட்சி நியமனக் குழு கூடவுள்ளது. அதன்போது இந்த கருத்துகள் அனைத்தும் முன்வைக்கப்படும் என்றும், எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிடுவது குறிப்பாக கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுத்து கொழும்பு கிளைக்கு அறிக்கை தருவதாக சுமந்திரன் தெரிவித்தார்.
கடந்த ஜனவரியில் கூடிய மாவட்ட கிளை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளுடன், ஒப்பிடுகையில் இன்று தெரிவிக்கப்பட்ட கருத்துகளில் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற கருத்து தீவிரமாக உள்ளதை தாம் அறியக் கூடியதாக இருந்ததை சுட்டிக்காட்டிய சுமந்திரன், இக்கருத்துகள் யாவும் மிகுந்த கரிசனையுடன் ஆராயப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
கிளை செயலாளர் ஆர்னல்ட் பிரியந்தன் வரவேற்புரை நிகழ்த்தியிருந்தார். இரத்தின வடிவேல் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.