அபிவிருத்தி தடைப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்வதில் மக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் திட்டத்தின் நோக்கமாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரப்பிரசாதங்கள் அற்ற மக்கள் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாவதால் பாதுகாப்புத் தொடர்பான பல பிரச்சினைகளை கடந்த காலத்தில் எதிர்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இனம், மதம், மொழி, பிரதேசம் என்பவற்றை கருத்திற்கொள்ளாமல் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சமபொருளாதார வாய்ப்பை வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். இதனைக் கருத்திற்கொண்டு மக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார செயற்திட்டத்தை தான் முன்மொழிந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதிநிதிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
ஏழை மக்கள் உட்பட சமூகத்திலுள்ள அனைவருக்கும் பொருளாதார முன்னேற்றத்தின் பயன் கிடைக்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
வறுமையிலிருந்து மக்களை விடுவித்து பொருளாதாரத்தின் பங்காளிகளாக அவர்களை மாற்றியமைத்து வாழ்க்கைத் தரத்தை விருத்தி செய்ய வேண்டும். டிஜிற்றல் யுகத்தின் தேவைப்பாடுகளுக்கு அமைய உயர்மட்ட நிபுணத்துவம் கொண்ட ஒரு தரப்பை உருவாக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கல்வி நிறுவனங்களில் இருந்து உருவாகும் ஊழியர் படைக்கும் தொழிற்சந்தைக்கும் இடையில் பொருத்தமின்மை காணப்படுவதால், கல்விக் கட்டமைப்பின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குறுங்கால மற்றும் மத்திய கால தீர்வைக் காண்பது ஓர் அவசரத் தேவைப்பாடாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
28 வருடங்களின் பின்னர், இந்தத் துறை சார் நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய முதலாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப, திறன் பேரவையின் தலைவர் சிந்தக விஜேவிக்ரம குறிப்பிட்டார்.