கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்களை பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்குமாறு கோரி மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை கொழும்பு தலைமை நீதிவான் நிராகரித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கறுவாதோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயர்கல்வி அமைச்சுக்கு முன்னிலையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது மாணவர்கள் உயர்கல்வி அமைச்சுக்கு முன்னிலையில் உள்ள பிரதான வீதி , பாதக்கடவை மற்றும் அமைச்சுக்குள் செல்வதற்கான பிரதான வழியையும் மறைக்கும் வகையில் முகாம் அமைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல்களும் ஏற்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய கறுவாத்தோட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதித்தமை , பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் இந்த செயற்பாடுகளுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியமை என குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடக்கப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து நீதிவான் அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.