பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பீதியால் இளம்பெண்ணைத் தாக்கி சுயநினைவை இழக்க வைத்த இளைஞரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பர்மிங்காம் பகுதியில் கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் தற்போது தாக்குதலை முன்னெடுத்துள்ள இளைஞரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதல்தாரி ஆசிய நாட்டவர் என கருதுவதாகவும், 5.8 அடி உயரம் கொண்டவர் எனவும் பருமனான உடல் அமைப்பு கொண்டவர் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட மீரா சோலங்கி என்பவர் தமது சீனத்து தோழி ஒருவருடனும் சில ஆண் நண்பர்களுடனும் தமது 28 ஆம் பிறந்தநாளை கொண்டாடி வந்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் இருந்த இளைஞர் கும்பல் ஒன்றில் ஒருவர், திடீரென்று ஆவேசத்துடன், மீராவின் சீனத்து தோழியான மாண்டி ஹுவாங் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மட்டுமின்றி உங்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் நாட்டைவிட்டு விரைவில் வெளியேறிவிடுங்கள் எனவும் கத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நிலைகுலைந்து போன மீரா மற்றும் அவரது தோழி மற்றும் நண்பர்கள், பிரச்சனை பெரிதாக்க வேண்டாம் என அங்கிருந்து நகர்ந்துள்ளனர்.
ஆனால் அந்த கும்பல் தொடர்ந்து சென்று மீராவின் சீனத்து தோழியை இழிவாகவும், இன ரீதியாகவும் பேசியுள்ளது.
ஒருகட்டத்தில் பொறுமை இழந்த மீரா சோலங்கி, தமது தோழிக்கு ஆதரவாக அந்த கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பலில் ஒரு இளைஞர், மீராவை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். இதில் மீரா சம்பவயிடத்திலேயே சுய நினைவை இழந்து சரிந்துள்ளார்.
இதனையடுத்து ஒருவார காலம் கட்டாய ஓய்வுக்கு நிர்பந்திக்கப் பட்டுள்ளார் மீரா. இந்த விவகாரம் தொடர்பில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.