அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்பில் கண்காணிப்பில் உள்ள தமது 89 வயது கணவரை மூதாட்டி ஒருவர் சந்தித்துப் பேசும் புகைப்படம் ஒன்று தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
சீனாவுக்கு அடுத்து கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. இன்று மட்டும் இருவர் பலியான நிலையில், மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை 14 என அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்றுடன் 230 என பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வாஷிங்டன் மாநிலத்தின் கிர்க்லாண்டில் அமைந்துள்ள கொரோனாவுக்கான சிறப்பு சுகாதார மையத்தில் இந்த அரிய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 89 வயதான தமது கணவர் Gene-ஐ சந்திக்க 88 வயதான டோரதி காம்ப்பெல் சென்றுள்ளார்.
ஆனால் வெளியாட்கள் எவருக்கும் உள்ளே அனுமதி இல்லை என்பதால், ஜன்னல் கண்ணாடி வழியாக அவர் நலம் விசாரித்துள்ளார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டுள்ள பலரும் அந்த சிறப்பு சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டோரதி வியாழக்கிழமை தனது கணவருடன் எவ்வாறாயினும் தொடர்பு கொள்ள வேண்டும் என தீவிரமாக முயன்றுள்ளார்.
ஒருவழியாக தமது கணவரை ஜன்னல் கண்ணாடி வழியாக பார்க்க முடிந்த மகிழ்ச்சி அவரது முகத்தில் பிரதிபலித்தது என அவரது மகன் சார்லி காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.
இருவரும் தொலைபேசி வாயிலாக சில நிமிடங்கள் பேசியுள்ளனர். நீண்ட 60 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த அவர்களுக்கு சில நாள் பிரிவு தாங்க முடியவில்லை.
அதனாலையே தமது கணவரை காண வேண்டும் என அந்த தள்ளாத வயதிலும் அவர், சுகாதார மையத்திற்கு விரைந்துள்ளார்.
கொரோனா அச்சம் விலகி தனது கணவர் எப்போது குடியிருப்புக்கு திரும்புவார் என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை என்றாலும், ஒரு முறை பார்க்க முடிந்த மகிழ்ச்சியில் டோரதி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
டோரதி குடியிருக்கும் கிங் கவுண்டி பகுதியில் மட்டும், கொரோனா பாதிப்புக்கு இதுவரை 10 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து கிங் கவுண்டி நிர்வாகம் 4 மில்லியன் டொலர் தொகைக்கு ஒரு மொட்டேல் ஒன்றை வாங்கி, அந்த கட்டிடத்தை சுகாதார மையமாக மாற்றியுள்ளது.




















