யாழ்.சாவகச்சேரி -நுணாவில் பகுதியில் ஒப்பந்த நிறுவனக் கட்டடம் ஒன்றில் தங்கியுள்ள சீன பணியாளர் ஒருவரால் சாவகச்சேரி பகுதியில் கொரோனா பீதி ஏற்பட்ட சம்வம் இடம்பெற்றுள்ளது.
தென்மராட்சிப் பகுதியில் வீதி அமைப்பு ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சீன பிரஜை ஒருவர் இலங்கையில் இருந்து கடந்த முதலாம் மாதம் 15 ஆம் திகதி சொந்த நாடான சீனாவிற்கு சென்றுள்ளார்.
சீனா சென்ற குறித்த நபர் மீண்டும் கடந்த இரண்டாம் திகதி இலங்கை திரும்பி சாவகச்சேரி-நுணாவில் பகுதியில் அமைந்துள்ள தனது ஒப்பந்த நிறுவனக் கட்டடத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார்.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சிலர் இது தொடர்பாக சாவகச்சேரி சுகாதாரப் பிரிவு மற்றும் நகரசபை ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரப் பகுதியினர் கண்காணிக்கச் சென்ற போது குறித்த நபர் பரிசோதனைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியதாகவும், கொரோனாவிற்கான அறிகுறிகள் எவையும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் கொரோனா அபாயம் உள்ள நாடுகளில் இருந்து திரும்பியவர்களை 12 தினங்கள் சுகாதாரப்பகுதி கண்காணித்து அவருக்கு எந்தவித தொற்றும் இல்லை என்பதனை உறுதிப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.