பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் வரும் 9-ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் துக்ளக் இதழ் விழாவில் பேசிய ரஜினி 1971-ல் திராவிடர் கழகப் பேரணியில் ராமர், சீதையின் நிர்வாண உருவங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகப் கருத்து தெரிவித்திருந்தார்.
உண்மைக்கு மாறாக பேசியதாக அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது திராவிடர் கழகப் பேரணியில் ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டுசெல்லப்பட்டது தொடர்பாக எந்த புகைப்பட ஆதாரமும் இல்லை என்றும் 50 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் குறித்து ரஜினி அரசியல் லாபத்திற்காகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.