நிபந்தனையின்றி அன்னம் சின்னத்தை பொதுத்தேர்தலுக்காக தருவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் கட்சி இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்க தரப்பும், ஐக்கிய தேசிய சக்தியின் சஜித் பிரேமதாச தரப்பும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இணக்கம் தற்போது எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவும் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தில் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கான உடன்பாடு நேற்று முன்தினம் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, அன்னம் சின்னத்தை கொண்டுள்ள ரவி கருணாநாயக்கவுடைய கட்சியின் செயலாளர், தேசிய ஐக்கிய சக்தியின் செயலாளர் ரஞ்சித மத்துமபண்டார ஆகியோர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.