கதிரைகள் மீதான பற்றே இன்று புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றதே தவிர வேறெதுவும் இல்லை என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
மாற்றுத்தலைமை என இன்று பலர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு வருவார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்காக கட்சிகளை உருவாக்கவில்லை.
மக்கள் நலனுக்காகவும் கட்சிகளை உருவாக்கவில்லை. அவர்கள் கதிரைகள் மீது உள்ள பற்றின் காரணமாகவே கட்சிகளை உருவாக்கினார்கள். இன்று எம் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
அந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதேசவாரியாக மக்களுக்கு விளக்கத்தினை வழங்க தயாராகவே இருக்கின்றேன். யாரையும் பெயர் குறிப்பிட நான் விரும்பாவிட்டாலும்.
யாராவது இவ்வாறு தெரிவித்தனர் என்றால் அவர்களைப்பற்றி கூற நானும் தயாராக இருக்கின்றேன்.
அவர்களைப் பற்றி முழு விபரமும் என்னிடம் இருக்கின்றது. யார் யார் எவருடன் தொடர்பினை வைத்திருந்தனர் யாருடைய நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டார்கள் என்ற முழு ஆதாரமும் என்னிடம் உள்ளது.
இதேவேளை தமிழர்களின் நிரந்தரமான தீர்வுக்கு அரசியல் அமைப்பு மாற்றம் என்பது அவசியமானதாகும். அதன் மூலம்தான் தமிழர்கள் முன் உள்ள பிரச்சனைகளுக்கு 80 வீதமான தீர்வு கிடைக்கும்.
வடக்கு – easterகிழக்கு தமிழர்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக இருந்தது. ஆனால் இன்று தமிழர்களது இனவிகிதாசாரத்தினை குறைக்கும் அளவிற்கு சிங்கள குடியேற்றங்கள் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு அவர்கள் கையாளும் தந்திரம் மகாவலி திட்டமாகும்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு அல்லது தமிழரசுக்கட்சி 100 வீதம் சரியாக செயற்பட்டது என்று நான் கூறவில்லை. ஆனால் மக்களுக்கு உண்மையாக இருக்கின்றது.
தமிழ் இனத்தின் அடையாளத்திற்காக கொள்கை ரீதியாக தனித்துவமாக பயணிக்கின்றோம். மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை நாங்கள் சிந்தித்து கட்சியாக எடுத்திருக்கின்றோம். இதனால் விலைபேச முடியாத சக்தியாக இருக்கின்றோம் என்பதனை தெரிவிக்கின்றேன்.
கூட்டமைப்பின் வேட்பாளர்களை பலப்படுத்துவதனால் எமக்கு எதிராக உள்ள சர்வதேச விடயங்களானாலும் சரி சிங்கள குடியேற்றமானாலும் அபிவிருத்தி விடயங்களிலும் கையாளக்கூடிய நிலை ஏற்படும். எனவே எம்மில் பலரது கருத்துக்கள் மக்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அது அவர்களது தனிப்பட்ட கருத்துக்களேயாகும்.
அது கூட்டமைப்பின் கருத்துக்கள் இல்லை என்பதனை பகிரங்கமாக கூறுகின்றேன். அவர்களின் கருத்துக்களை வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஒதுக்கிவிடகூடாது என தெரிவித்துள்ளார்.