இலங்கை புலனாய்வு கட்டமைப்பின் முகவர்களாக ஐ.நாவிற்கு வந்தவர்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களாக களமிங்கியிருப்பது மனவேதனையை அளிப்பதாக பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குனர் ச.வி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குனரரான இவர், கடந்த 38 ஆண்டுகளிற்கும் மேலாக மனித உரிமை சபையில் தமிழர் தரப்பு விவகாரங்களைக் கையாண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பாக த.தே.கூட்டமைப்பிடம் பகிரங்க கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ள கிருபாகரன், உயர்வான மனித உரிமைகளை தரம் தாழ்த்தி கூட்டமைப்பு பயன்படுத்துவது மிகவும் வேதனையான விடயம் என்று தெரிவித்துள்ளார்.
2009வரை ஒத்தக் கொள்கையுடன் உறுதியாக தடம் மாறாத நேர் கொண்ட பார்வையுடன் இருந்த கூட்டமைப்பு புதியவர்களின் வரவால் திசை மாறி தடம்மாறும் நிலையில் உள்ளமை கவலையளிக்கின்றது.
ஐ.நா சபையில் நல்லாட்சி அரசு என்று சொன்னாலும் சரி, அதற்கு முந்திய அரசு என்று சொன்னாலும் சரி, நடைமுறையில் உள்ள அரசு என்றாலும் சரி, அதற்கு எதிராக நாம் ஆணித்தரமான பல கருத்துக்களை முன்வைத்த போது அவை செவிமடுக்கப்படவேயில்லை.
ஆனால் தமிழர் தரப்பு நியாயங்களை செவிமடுக்கக்கூடத் தயாராக இல்லாத அரசாங்ககளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிரசுக்கட்சியில் இடைநடுவே வந்து சேர்ந்த சிலர் ஆதரவு வழங்கி வந்தது மாத்திரமல்ல, ஒட்டுமொத்தக் கட்சியையுமே தனது விருப்பத்திற்கு வலிந்து இட்டுச்சென்று கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
பலரின் தியாகத்தாலும் விட்டுக் கொடுப்பாலும் வியர்வை சிந்தி இரத்தம் தோய்ந்து காலத்தின் கட்டாயமாக அன்று உருவான கூட்டமைப்பை, கண்ணாடி மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளிருந்து வந்தவர்கள் புதிய வியாக்கியானம் கூறி தடம் மாறச் செய்வது மிகவும் கவலை அளிக்கின்றது.
2009இன் பின்னர் வாக்குரிமை பெற்ற எம் மதிப்பிற்குரிய இளம் சமுதாயமே வரலாறுகளை முடிந்தவரை படியுங்கள். அல்லது உங்கள் முன்னோர்களிடம் சற்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
மாயை அரசியலில் மகத்தான எம் தேசத்தின் சொத்தை பிழையான பொருட்கோடலுடன் வழிநடத்த நினைப்பவர்களிடம் இருந்து ஒற்றுமையை மையப்படுத்தி ஒன்று சேருங்கள்.
ஐ.நா. என்பது பலசரக்குச் கடையல்ல. பல்துறை சார்ந்த கட்டமைப்புக்களை உடைய உயரிய சாசனம் அது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009இன் பின்னர் இராஜதந்திரம் என்ற ஒன்றை சொல்லை கூறி காணல் நீராக்கியதே தவிர காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக தெரியவில்லை.
உலக அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்றாற்போல் சர்வதேசம் நகர்த்துகின்ற அரசியல் நகர்வுகளில் ஈழத் தமிழர்களின் சார்பில் பலமான, திடமான நிலைப்பாட்டோடு விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவர்களின் நேர்கொண்ட பார்வையோடு இருந்திருக்குமாக இருந்தால் யுத்த அழிவு இடம்பெற்ற 10 ஆண்டுகளில் ஒரு முழுமையான துவக்கத்தை ஆரம்பித்ததிருக்க முடியும்.
ஆனால் இன்று கையறு நிலையில் மீண்டும் உயர் ரக ஆங்கில சொற்களுக்கு தமிழ் வியாக்கியானமும் தமிழ் சொற்களுக்கு ஆங்கில வியாக்கியானமும் கூறுவது எத்தனை நாட்களுக்கு இந்த மக்களை ஏமாற்றும் என்பது தெரியவில்லை.
கூட்டமைப்பு என்பது தனி ஒருவருக்கோ அல்லது எந்த ஒரு தனி குழுவுக்கோ உரித்துடையது என்ற பதம் கூட்டமைபபு உருவாக்கப்பட்ட காலத்தில் எங்கும் யாராலும் கூறப்படவில்லைவில்லை. எழுதப்படவும் இல்லை.
விடுதலைப் புலிகள் காலத்தில் கடைபிடிக்காத உயர் இராஜதந்திரத்தையா தற்போது கூட்டமைப்பு கடைபிடித்துவிடப் போகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இராஜதந்திரம் என்று கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒருவர் இருவரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகள் என கூறப்பட்ட அனைவரும் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் இன்று இராஜதந்திரம் என்று கூறிக்கொண்டு ஒருவர், இருவர் என அழைத்து கூட்டமைப்பு பேசுவது என்ன என்பது புரியவில்லை.
விடுதலைப் புலிகள் கையாளாத இராஜதந்திர உத்திகளையா கூட்டமைப்பு இன்று கையாண்டு விடப் போகின்றது.
இந்த நிலையில் இராஜதந்திரம் எனக் கூறப்பட்டு நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் ஒட்டுமொத்தத்தில் பொதுமைப்படுத்தப்பட்ட கருத்துக்களாக வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
இதனை கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைர்வகள் நன்கு அறிவார்கள். அப்படி இருக்கையில் இன்று ஒருவர் இருவர் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு விட்டு அதற்கு உயர் இராஜதந்திரம் என பெயர் சூட்டுவது மிகவும் வேதனை அளிக்கின்றது.
ஐ.நா சபையில் அதிகளவான இலங்கையர்கள் பங்குபற்றுகின்றமை வழமை. ஆனால் சிங்கள முகவர் அமைப்புக்கள் ஊடாக ஐநா சபைக்குள் எம் தமிழ் இனத்தை சேர்ந்த பலரும் வந்து எம்மிடம் இருக்கின்ற தகவல்கள் பலவற்றை அறிந்து அந்த அமைப்புக்கள் ஊடாக இலங்கை புலனாய்வு கட்டமைப்பிற்கு கொடுத்தமையை கூட்டமைப்பு நன்கு அறியும்.
இதனை வெளிப்படையாக பல தடவைகள் கூறியிருக்கின்றேன். அப்படி இருக்கும்போது வேட்பாளர்கள் பட்டியல்கள் எப்படி இருக்கின்றது? ஐ.நாவுக்கு புலனாய்வாளர்களாக வந்தவர்கள் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றது.
2015ம் ஆண்டு அமெரிக்காவின் பிரேரணை வெளியாகின்ற போது அதற்கு எதிராக கிளிநொச்சியில் சந்திரகுமார் மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் பாரிய பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். மேலும் கிழக்கில், கல்முனை பகுதியில் அருண் தம்பிமுத்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
இவ்வாறு இருந்த பங்குதாரர்களை கூட்டமைப்பு நியாயப்படுத்துகின்றது என்றால் ஐ.நா தொடர்பில் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு என்ன?
மகிந்தவின் கருத்துக்களைச் சுமந்தவர்களுக்கு நீங்கள் ஆதரவளிப்பது உண்மையானால், மகிந்தவிற்கு எதிராக நீங்கள் இனிவரும் காலங்களில் செயற்படக் கூடாது.
அதற்கான தார்மீகததை நீங்கள் இழந்து விட்டீர்கள். மகிந்தவுக்கு ஆதரவான ஒத்த செயற்பாடுகளையுடைய ஒருவரை ஆதரிப்பது என்றால் மகிந்தவை ஆதரிப்பதற்கு சமம் அல்லவா.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அடையாளமே அன்றி அவமானம் அல்ல.
இந்த அடையாளத்தை எதிர்வரும் காலங்களில் பொறுப்பு வாய்ந்த தலைவர்களாகிய நீங்கள் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்.
தவறானவர்களை வெளியேற்றி விட்டோம் என்று நீங்கள் மார்பு தட்டலாம். அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் நினைத்திருந்தால் கூட்டமைப்பு இன்று இருந்திருக்க முடியாது என்பதை கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் உணர்வார்கள்.
எனவே தமிழர்களின் உயிர் மூச்சு, தாய்மடியை பாதுகாத்து வளப்படுத்தி கூட்டமைப்பு மிகப்பிரதான அரசியல் சக்தியாக இலங்கையிலும் சர்வதேசத்திலும் மிளிர்வதற்கு அனைத்து தரப்பு கூட்டமைப்பின் தலைவர்களும் தனிநபர் விருப்பு வெறுப்புக்கள், தனி நபர் ஆசாபாசங்களை களைந்து இதனை உருவாக்கினார்கள்.
அப்படிப்பட்டவர்களின் தியாகங்களை மறந்து தமிழர்களின் மிகப்பெரிய அடையாளத்தை களங்கப்படுத்தி கறைபடிய வைத்துவிடாதிருங்கள் என்று பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குனரும், 38 ஆண்டுகளிற்கும் மேலாக மனித உரிமை சபையில் பல்வேறு விடயங்களை கையாண்டு வருபவருமான ச.வி கிருபாகரன் த.தே.சுட்டமைப்பிற்கும், மனித உரிமைகள் சபையில் பணி செய்யும் மனித உரமை அமைப்புக்களுக்கும் அவற்றின் செயற்பாட்டாளர்களும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.