கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களை மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களில் அழைத்து வந்து தங்கவைத்து சிகிச்சை மற்றும் பரிசோனை வழங்கும் முகாம்களை அமைப்பதைன விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதச சபையில் விசேட அமர்வில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்ட்டதாக வாகரை பிரதேச சபை தவிசாளர் சி. கோணலிங்கம் தெரிவித்தார்.
இன்று இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த கால யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தத்தினால் வாகரை பிரதேசம் பெரிதும் பாதிக்க்பட்டுள்ளதுடன் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகவும் வாகரை பிரதேசம் உள்ளது. தற்போது வெகுவாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயானது சர்வதேச ரீதியில் பல இடங்களிலும் காணப்படுவதாக அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், அவ்வாறான நோய் தொற்றுக்குள்ளானவர்களை வாகரை பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களுக்கு அழைத்து வருகின்றமை இப் பிரதேசத்தினை மேலும் வறுமை நிலைக்கு இட்டு செல்லும். அவர்களது நாளாந்த செயற்பாடுகளிலே முடக்கம் செய்யப்படும் என்றார்.
எங்களது புத்தி ஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், ஆர்வலர்கள் மற்றும் கல்விமான்கள் இச் செயற்பாட்டினை முற்றாக எதிர்ப்பதினால் மக்கள் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் எங்களது பிரதேசங்களில் இவ்வாறான நிலையங்கள் அமைப்பதனை முற்றாக எதிர்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மேற்படி விடயம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான தகவல் அடங்கிய அறிக்கையினை சுகாதார அமைச்சின் செயலாளாருக்கு அனுப்பியுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.