புகையிரத சேவையின் குறைபாடுகளை கண்டறிந்து அதனை வினைத்திறனானதும் மக்கள் நேய சேவையாகவும் மாற்றுவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.
புகையிரத காலதாமதங்களை இல்லாது செய்தல், புகையிரத பெட்டிகளின் வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி இச்சேவையை முறைப்படுத்துவதற்கு தேவையான திட்டங்கள் மற்றும் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
புகையிரத சேவையின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்தார்.
நாளாந்த புகையிரத சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 385,000 ஆகும். இவர்களுக்கும் மேலும் பலருக்கும் புகையிரத சேவைகளை வழங்கி வீதி நெரிசலுக்கு போதுமான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
புகையிரதப் பயணிகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நெரிசலுக்கு மத்தியில் பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்த நிலைமையை ஒழிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பிரச்சினைகளை தீர்க்கின்றபோதும் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போதும் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு, முன்மொழிவு மற்றும் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.
மக்களின் தேவையின் அடிப்படையில் நாளாந்த நேரசூசி தயாரிக்கப்பட வேண்டும். புகையிரத திணைக்களத்தின் தற்போதைய தொழிற்படையின் இயலுமையை கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேம்படுத்தி அதனூடாக பயனுறுதி வாய்ந்த சேவையொன்றினை வழங்குவது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
காலங்கடந்த சமிங்ஞை முறைமை புகையிரத தாமதத்திற்கு காரணமாகும். உள்நாட்டு பொறியியலாளர்களின் பங்களிப்புடன் அதற்கு தேவையான தீர்வுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அலுவலக நேரம் அல்லாத நேரங்களில் பொருட்களை கொண்டு செல்லும் சேவைக்காக புகையிரதத்தை பயன்படுத்தக்கூடிய இயலுமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அது தேசிய பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்காகக்கொண்டு புகையிரத சேவையை கவர்ச்சிகரமான முறையில் நவீனமயப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர் மஹிந்த அமரவீர, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆட்டிகல, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனெவிரத்ன, புகையிரத பொது முகாமையாளர் எம்.ஜே.டி.பெர்ணான்டோ ஆகியோரும் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.